மறுபக்கம் புதினத்தில் சாதியமைப்பு
Dr S.Veera Alagiri MA,. M.Phil,. Ph.D.(Ling)
Tamil Lecturer
& Project
Associate
Amrita University ,
Coimbatore. Pin 641105
&
M.Maha Lakshmi MA,. M.Phil,. (Tamil)
Coimbatore. Pin 641105
&
M.Maha Lakshmi MA,. M.Phil,. (Tamil)
1.0 முன்னுரை
சாதி என்பது தொழில், பொருளாதார வசதி, இனம், போன்றவற்றின் அடிப்படையிலான சமூகத் தரப்படுத்தல்கள் ஆகும். சாதிமரபு
மற்றும் பிறப்பைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதோடு பொது வழக்கு அல்லது சட்டம் மூலம் பாதுகாக்கபடுகிறது.
1.1 சாதியின் தோற்றம்
சாதியின் தோற்றம் குறித்துப் பக்தவச்சல பாரதியின் மானிடவியல்
கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின் தோற்றம் குறித்து இந்தப்
பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டவை. அதில் சாதியத்தின்
தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
1.
மரபுக் கோட்பாடு (traditional theory)
2.
தொழிற் கோட்பாடு (occupational theory)
3.
சமயக் கோட்பாடு (religious theory)
4.
அரசியற் கோட்பாடு (political theory)
5.
இனக் கோட்பாடு (racial theory)
6.
படிமலர்ச்சிக் கோட்பாடு (evolutionary theory)
1.1.1 மரபுக் கோட்பாடு
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு
ஆகும். ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றே
கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக் குறிப்பிட்டாலும்,
பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.
1.1.2 தொழிற் கோட்பாடு
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தன
என்பதுவே தொழிற் கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாகத் 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன. பிறப்பு ரீதியிலான தமிழ்ச் சமூக அமைப்பை
மறுக்கும் பலர், தொழில் ரீதியிலான தமிழ்ச் சமூக அமைப்பு இயல்பானது என்றும் கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.
1.1.3 சமயக் கோட்பாடு
சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக
இந்து சமயச் சூழலே.
1.1.4 அரசியற் கோட்பாடு
உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துக்கொண்ட
அமைப்பே சாதி என்பது அரசியற் கோட்பாடு.
1.1.5 இனக் கோட்பாடு
ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை
அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு. "குடியேறிய
ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாக திகழ்ந்ததால்
அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத் தொடங்கினர்."[2]
1.1.6 படிமலர்ச்சிக் கோட்பாடு
1.2 இந்திய சாதி அமைப்பு
இந்தியத் துணைக்கண்டத்தில் சாதி தொழிலின் அடிப்படையில் தோன்றிப்
பின்னர் பிறப்படிப்படையில் மாற்றம் பெற்றது. இந்தியாவில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து
பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் கூடி வாழ்ந்திருக்கிறார்கள். பல்வேறு போக்குகளால் பிறப்படிப்படையில்
சாதிகள் அடையாளம் கொண்டு இன்றளவும் நிலைபெற்றுள்ளன.
தமிழரிடையே சாதி என்பது, வழிவழியாய்த் தொழில் அடிப்படையில் (பரம்பரைத்தொழில்) இருந்த
குழுக்களும் கூட்டங்களும் நாளடைவில், பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாய் மாறி,
பின் படிமுறை அமைப்பும் ஏற்பட்டது. சாதிகளில் படிமுறை ஏற்றாத்தாழ்வுகள்
தமிழரிடம் தொன்றுதொட்டு இருந்ததல்ல; ஆனால், எப்பொழுது எவ்வப்பகுதிகளில், எத்தனை வலுப்பெற்று இருந்தது என்பது திண்ணமாய்த் தெரியவில்லை.
சாதி வகுப்பு முறைமைகளும் படிமுறை அமைப்பும் இடத்துக்கிடம் வேறுபடும். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும்,
முற்கால அரசரிடமும், பிற செல்வந்தர்களிடமும் இருந்த நெருக்கம்,
அணுக்கம் பற்றிய உறவாட்ட வேறுபாடுகளினாலும்,
சாதிகளில் ஏற்றத்தாழ்வுகள் மாறி வந்துள்ளன. வடமொழியில் உள்ள
மனு ஸ்ம்ரிதி ( மனுநீதி சாத்திரம் ) என்னும் நூலும் அவ்வரிசையில் உள்ள பிற வடமொழி நூல்களும்,
தமிழரிடையே சாதியின் அடிப்படையில் பிறப்படிப்படையில் ஏற்றத்தாழ்வுகள்
ஊட்டவும் வலியுறுத்தவும் துணை செய்தன. தமிழில் பிறப்பின் அடிப்படையில் படிமுறையில்
ஏற்றத்தாழ்வுகள் கூறும் நூல்கள் யாதும் 16 ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆன காலப்பகுதியில் இருப்பதாகத் தெரியவில்லை.
1.3 தமிழகத்தில் தற்போதைய சாதிக் கொடுமைகள்
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான ஆதிக்க சாதித் திமிரும்,
வன்கொடுமையும் மட்டுமின்றி, ஆதிக்க சாதிக் கும்பலின் சுயசாதிப் பற்றும்,
பெருமையும் பச்சையாக, அருவெறுக்கத்தக்க வகையில் மீண்டும் தமிழகத்தில் வெளிப்பட்டு
வருகிறது. அரசு பொதுப் பள்ளியில் தாழ்த்தப்பட்டோர்
சேர்க்கப்படுவதை மறுப்பதாக, தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவதைத் தடுப்பதாக,
கலப்பு மணத்தை எதிர்ப்பதாக, தாழ்த்தப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர்களை அவமதிப்பதாக,
ஆதிக்க சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களை ஊரை விட்டு ஒதுக்குவதாக,
தீண்டாமைச் சுவராக, இரட்டை குவளையாகத், தாழ்த்தப்பட்டோர் படித்தும், உழைத்தும் சுயமரியாதையுடன் வாழ்வதைப் பொறுத்துக் கொள்ளமுடியாத
பொறாமையாக இப்படிப் பல்வேறு வடிவங்களில் இந்த
ஆதிக்க சாதித் திமிர் தலைவிரித்தாடி வருவதற்க்குச் சமீப காலமாக நடந்துவரும் பல்வேறு
சம்பவங்களை எடுத்துக்காட்டலாம்.
1.3.1 திருவண்ணாமலை
திருவண்ணாமலை
நகருக்கு அருகே அமைந்துள்ள ஆடையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான குமார்,
அவ்வூரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்த தனது இரண்டு மகன்களையும் அதே கிராமத்திலேயே செயல்பட்டுவரும் மற்றொரு அரசுப்
பள்ளியான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இந்தக் கல்வியாண்டில் சேர்த்தார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அக்கிராமத்தைச்
சேர்ந்த ஆதிக்க சாதியினர், அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளியிலிருந்து விலக்காவிடில், அவ்வூராட்சிப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் தங்களது பிள்ளைகளைப்
பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப மாட்டோம் என மிரட்டல் விடுத்தனர்.
அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் தமது குழந்தைகளை
ஆதிதிராவிடர் பள்ளியில்தான் சேர்த்து வரும் இந்த ஐம்பது ஆண்டுக் கால வழக்கத்தைக் குமார்
மீறிவிட்டதாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெரும்பாலோர் பொருமி வருகின்றனர். அரசு அவ்விரண்டு தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் ஊராட்சி
ஒன்றியப் பள்ளியிலிருந்து நீக்க மறுத்துவிட்டது; எனினும், ஆதிக்க சாதியினர் தமது பிள்ளைகளை வேறொரு பள்ளியில் சேர்க்கப்
போவதாகக் கூறி, இந்த நவீன தீண்டாமையை நடைமுறைப்படுத்த முயன்றனர்.
1.3.2 கிருஷ்ணகிரி மாவட்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த கல்கேரி கிராமத்தில் அமைந்துள்ள
கரகம்மாள் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் வழிபாடு செய்வதை மறுத்து,
ஆதிக்க சாதியினர் தீண்டாமையைக் கடைப்பிடித்து வந்தனர். தாழ்த்தப்பட்டோர் இத்தீண்டாமையை எதிர்த்துப் பல்வேறு
போராட்டங்களை நடத்தியதையடுத்து, அக்கோவில்களில் 2009, சனவரி 1 முதல் தாழ்த்தப்பட்டோரும் நுழைந்து வழிபாடு நடத்தலாம் என்ற
உரிமை நிலை நிறுத்தப்பட்டது.
ஆனால், ஆதிக்க சாதியினர் மிகுந்த தந்திரத்தோடு,
அக்கோவில்களில் இருந்த மூல விக்கிரகங்களைத் திருடி,
தமது பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கோவில்களில் வைத்துவிட்டு,
இப்புதிய கோவில்கள் தமது சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது என்று
கூறி,
இக்கோவில்களில் தாழ்த்தப்பட்டோர் நுழைவதற்குத் தடைவிதித்து,
ஆலயத் தீண்டாமையைப் புதிய வடிவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
1.3.3 கடலூர்:
கடலூர் நகருக்கு அருகேயுள்ள நிறமணி கிராமத்திலுள்ள மாரியம்மன்
கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைந்து வழிபட்டனர் என்பதற்காகவே,
அக்கோவில் திருவிழாவையொட்டி நடைபெறவிருந்த தீமிதி உள்ளிட்ட அனைத்து
நிகழ்ச்சிகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நல்லூர் ஊராட்சி
மன்றத் தலைவர் மணிவேல். இந்து அறநிலையத் துறையின்
கட்டுப்பாட்டின் கீழ் இந்த மாரியம்மன் கோவில் இருந்தாலும்,
அக்கோவில் ஊருக்குள் இருப்பதால்,
ஆதிக்க சாதியினர் இக்கோவிலைத் தமது கோவில் என்று சொந்தம் கொண்டாடுவதோடு,
“காலனியில் தனிக்கோவில் இருக்கும்பொழுது
தாழ்த்தப்பட்டோர் ஊருக்குள் இருக்கும் கோவிலுக்கு வழிபட வருவது ஏன்?”
எனக் கேள்வியை எழுப்பி, நவீன தீண்டாமையைப் புகுத்துகின்றனர்.
1.3.4 கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் பூவலப்பருத்தி கிராமத்தில் இன்றும் ஆதிக்க சாதியினர்
வசிக்கும் தெரு வழியாகச் செல்லும் தாழ்த்தப்பட்டோர்,
தமது செருப்புகளைக் கையில் தூக்கி வைத்துக்கொண்டுதான் செல்ல
வேண்டும் என்ற தீண்டாமை நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது போல, தமிழகத்தின் தென் மற்றும் மேற்கு மாவட்டக் கிராமங்களில் தாழ்த்தப்பட்டோருக்குத்
தேநீரை நெகிழிக்குவளைகளில் வழங்குவது; வெளிப்பார்வைக்கு ஒன்றாகத் தெரிந்தாலும்,
அடியில் வண்ணம் தடவப்பட்ட குவளைகளில் தேநீர் தருவது போன்ற நவீன
வடிவங்களில் இரட்டைக் குவளை முறை தொடர்ந்து வருகிறது.
தீண்டாமையின் காரணமாகவும், சுயசாதிப் பெருமை, பற்றின் காரணமாகவும் கலப்பு மணம் புரிந்து கொள்ளத் துணியும்
தம்பதியினரைக் கொன்று போடுவது சாதி சமூக அமைப்பில் புதிய நிகழ்வு அல்ல. இப்படிபட்ட கௌரவக் கொலைகள் வட மாநிலங்களில்தான்
நடைபெறும்; சுயமரியாதைப் போராட்டங்கள் நடந்த தமிழ்நாட்டில் இது போன்ற காட்டுமிராண்டித்தனங்கள்
அரங்கேறாது என்ற பொதுவான நம்பிக்கையை விருத்தாசலம் நகருக்கே அருகே 2003இல் நடந்த கண்ணகி முருகேசன்
தம்பதியினரின் படுகொலை கலைத்துப் போட்டது.
தமிழகத்தில் கௌரவக் கொலைகள் நடப்பது கண்ணகி முருகேசன் தம்பதியினரோடு தொடங்கவுமில்லை;
அவர்களோடு முடிந்துவிடவுமில்லை.
தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள கிராமங்களில் தீண்டாமை எந்தளவிற்கு மூர்க்கமாகக்
கோலோச்சி வருகிறது என்பதைப் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, கொட்டக்காஞ்சியேந்தல் கிராம ஊராட்சித் தேர்தல்கள் வெளிச்சம்
போட்டுக் காட்டின. கொட்டக்காஞ்சியேந்தல் ஊராட்சி
மன்றத் தலைவரான கருப்பன், மன்றத் துணைத் தலைவரும் மற்ற உறுப்பினர்களும் தன்னைத் தரையில்
அமர வைத்துத் தீண்டாமை பாராட்டுவதாக சமீபத்தில்கூடக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.
இக்குற்றச்சாட்டை விசாரிக்க வந்த மாவட்ட ஆட்சியர்,
கருப்பன் அக்குற்றச்சாட்டைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக
அறிவித்த கையோடு, ஊராட்சிப் பணத்தில் 1.16 இலட்ச ரூபாய் அளவிற்குக் கையாடல் நடந்திருப்பதாகவும்,
அப்பணத்தைப் பங்குபோட்டுக் கொள்ளுவதில் கருப்பனுக்கும் துணைத்
தலைவர் உள்ளிட்ட மற்றவர்களுக்கும் இடையே பிரச்சினை வந்ததையடுத்துதான் கருப்பன் இக்குற்றச்சாட்டைக்
கூறியதாகவும் விளக்கம் அளித்தார்.
தீண்டாமைக் குற்றச்சாட்டைத் தான் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டதாக
மாவட்ட ஆட்சியர் அறிவித்திருப்பதை மறுத்துள்ள கருப்பன்,
ஆதிக்க சாதியைச் சேர்ந்த துணைத் தலைவரும் மன்ற உறுப்பினர்களும்
தன்னைக் கட்டாயப்படுத்திக் காசோலைகளில் கையெழுத்து வாங்கி வருவதால்,
பணக் கையாடல் விவகாரத்தில் தனக்குச் சம்பந்தமில்லை எனக் கூறியிருக்கிறார். “புகார் அளித்த கருப்பன் மீதே பொருளாதாரக் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பதைப்
பார்த்தால், சாதிப் பாகுபாட்டை மறைப்பதற்காகவே இந்த விசாரணை நாடகம் அரங்கேறியிருக்கலாம்”[3] என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது,
1.3.5 பிற மாவட்டங்கள்
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சுகன்யா;
திருச்சியைச் சேர்ந்த ஜெயா; வேதாரண்யம் வட்டம், வண்டல் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா;
பழனி அருகிலுள்ள க.கலையமுத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீபிரியா;
தஞ்சை மாவட்டம் வடசேரியைச் சேர்ந்த சதுரா;
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த 17 வயதான திருச்செல்வி; திண்டுக்கல் அருகேயுள்ள புள்ளக்காடுபட்டியைச் சேர்ந்த சங்கீதா;
மானாமதுரை வட்டம் கே.புதுக்குளம்
கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான சிவக்குமார்; தண்டாரம்பட்டு வட்டம், ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினரான துரை;
ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான இளங்கோ;
கோவை மாவட்டத்திலுள்ள சோமனூரைச் சேர்ந்த அருந்ததியினரான சிற்றரசு;
திருவாரூக்கு அருகேயுள்ள அரிதுவார்மங்கலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவரான
சிவாஜி இவர்கள் அனைவரும் சாதி மறுப்பு கலப்புத்
திருமணம் செய்து கொண்டதற்காகக் கொல்லப்பட்டவர்கள். கடந்த நான்காண்டுகளில் நடந்து பத்திரிகைகளில் அம்பலமாகியுள்ள
கௌரவக் கொலைகளின் எண்ணிக்கையே இத்தனை இருக்கிறது என்றால்,
அம்பலத்துக்கு வராமலும், காவல்துறியினரால் மறைக்கப்பட்ட கௌரவக் கொலைகளின் எண்ணிக்கை எத்தனை
இருக்கக்கூடும்?
மிகவும் நேரடியாக, வெளிப்படையாக நடத்தப்படும் கௌரவக் கொலைகள் மட்டுமின்றி,
சாதி மற்றும் குடும்ப கௌரவத்திற்காகத் தூண்டப்படும் கௌரவத் தற்கொலைகள்,
குறிப்பாக இளம் பெண்கள் வலுக்கட்டாயமாகத் தற்கொலைக்குத் தள்ளப்படுவதும்
தமிழகத்தில் அதிகரித்த அளவில் நடந்து வருகிறது.
சனவரி 2008 தொடங்கி சூன் 2010 முடிய தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள பெண்களின் எண்ணிக்கை
1,971. அகால மரணமடைந்த இப்பெண்களுள் ஏறத்தாழ 90 சதவீதத்தினர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
2010-இல் தமிழகத்தில் கொலை செய்யப்பட்ட 629 பெண்களுள், 18லிருந்து 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 236. இவ்வழக்குகள் குறித்து முறையாகப் புலன் விசாரணை நடத்தினால்,
அவற்றுள் பல கௌரவத் தற்கொலைகளாகவும் கௌரவக் கொலைகளாகவும் இருக்கும்
உண்மை அம்பலத்துக்கு வரக்கூடும்.
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தீண்டாமை வக்கிர எண்ணமும்,
கலப்பு மணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அகமண சாதிப் பண்பாடும்
ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மத்தியிலும் ஆதிக்கம் செலுத்துவதால்,
அவர்களும் இக்கொலைகளை நியாயமானதாகவே பார்க்கின்றனர். அதனால்தான்,
கிராமப்புறங்களில் கௌரவக் கொலைகள் பலரின் கண் முன்னாலேயே அல்லது
ஊர்ப் பஞ்சாயத்தின் கட்டளைப்படியே நடத்தப்படுகின்றன.
பொறியியல் கல்லூரி மாணவியான கங்கவள்ளி,
தமது குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறித் தாழ்த்தப்பட்ட சாதியைச்
சேர்ந்த தனது காதலனை மணமுடிப்பதில் உறுதியாக இருந்ததால்,
கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் நகரில் பட்டப்பகலில் நடுச்சாலையில்
தனது தந்தையால் கத்தியால் குத்தப்பட்டுப் பின்னர் உயிர் பிழைத்துக் கொண்டார். இச்சம்பவம் படித்த,
நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் மத்தியிலும் கலப்பு
மணத்திற்கு எதிரான எண்ணம் ஊறிப் போயிருப்பதை எடுத்துக் காட்டுகிறது.
சாதி மறுப்புக் கலப்பு மணத்தை எதிர்ப்பதில் மட்டுமின்றி,
தாழ்த்தப்பட்டோர் நடத்தும் கோவில் நுழைவுப் போராட்டங்கள் தொடங்கி
இட ஒதுக்கீடு உள்ளிட்ட அவர்களின் ஒவ்வொரு சமூக உரிமையையும் எதிர்ப்பதிலும் ஆதிக்க சாதியைச்
சேர்ந்த உழைக்கும் மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் முன்னணியில் நிற்பதைக் கண்டதேவி கோவில்
தேரோட்டம் உள்ளிட்ட பல சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் 7,000 கிராமங்களில் இன்றளவும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் வெளிப்படையாகக்
கடைப்பிடிக்கப்படுகிறது. நகர்ப்புறங்களில்,
அரசுதனியார் அலுவலகங்களில், நவீனமான செய்தித்தொடர்பியல் துறையில் ஆதிக்க சாதிவெறி நுணுக்கமான
வடிவங்களில் வெளிப்படுகிறது.
இச்சாதிவெறியைக் ஊட்டும் சீவிவிடும் வேலையில் ஆதிக்க சாதி சங்கங்கள்
தற்பொழுது மும்மரமாக இறங்கியுள்ளன. ஒரு கட்சியைச்
சேர்ந்தவரும் வன்னியர் சங்கத் தலைவருமான குரு, சமீபத்தில் நடந்த சாதி மாநாட்டில்,
“நம் இனப் பெண்களைக் கலப்பு
மணம் செய்பவர்களை வெட்டுங்கடா” எனச் சாதித் திமிரெடுத்துப் பேசியிருக்கிறார். ஒரு சாதி சமீபத்தில்
கலப்புத் திருமண எதிர்ப்புப் பிரச்சார இயக்கத்தை நடத்தியிருக்கிறது. கலப்புத் திருமணத்தை எதிர்ப்பதற்குத் தமக்கு உரிமை
உள்ளது எனப் பிரகடனம் செய்கிறது, தமிழ்நாடு மற்றொரு சாதிச் சங்கம்.
‘‘இப்பவெல்லாம் யார் சார் சாதி பார்க்குறாங்க”
என ஆதிக்க சாதியினர் பேசிவருவது பகல் வேடம் என்பதை இந்த நிகழ்வுகள்
ஒருசேர எடுத்துக் காட்டுகின்றன. காலனிய ஆட்சிக்
காலம் தொடங்கித் தற்பொழுது வரை இந்தியச் சமூகப் பொருளாதார அமைப்பில் ஏற்பட்டுள்ள நகரமயமாதல்,
தொழில்மயமாதல் போன்ற மாற்றங்கள், இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்கள் ஒடுக்கப்பட்ட சாதியினர் நடுவிலும் ஒரு சிலர்
கல்விரீதியிலும் பொருளாதாரரீதியிலும் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, தனியார்மயம் தாராளமயத்தால்
விவசாயம் சீரழிந்து போன பின்பு, வேலைவாய்ப்புக்காக நகரத்தை நோக்கிச் செல்லுமாறு தாழ்த்தப்பட்டோர்
விசிறியடிக்கப்பட்டிருப்பது, இனியும் பொருளாதாரத்திற்காக ஆதிக்க சாதியினரைத் தாம் நம்பியிருக்கத்
தேவையில்லை என்ற நிலையை தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.
இம்மாற்றங்கள் தாழ்த்தப்பட்டோர் தமது சொந்த உழைப்பில் சம்பாதித்து
நல்ல உடை உடுத்தவும், ஊருக்குள்ளேயே செருப்பணிந்து செல்லவும்,
மிதிவண்டி போன்ற வாகனங்களில் செல்லவும்,
ஊர்க் கோவிலில் நுழைந்து வழிபாடவும்,
சம மரியாதையோடு நடத்தப்படவும்,
தன் சொந்த விருப்பத்தின் பேரில் சாதி மாறி காதலிக்கவும்,
கலப்பு மணம் புரிந்துகொள்ளவும் அவர்களைப் போராட வைத்திருக்கிறது.
நகரமயமாதல், தொழில்மயமாதல், தனியார்மயம்தாராளமயம் உள்ளிட்ட இதே ‘வளர்ச்சி’ப் போக்கு அனைத்து ஆதிக்க சாதிகள் மத்தியிலும்,
குறிப்பாகக் கிராமப்புற ஆதிக்க சாதிகளான ‘பிற்படுத்தப்பட்டோர்’
நடுவிலும் பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும்,
தாழ்த்தப்பட்டோர் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை,
அவர்களின் நியாயமான அரசியல் சமூக உரிமைக் கோரிக்கைகளை அங்கீகரிக்கும்
மக்கள்நாயகப் பண்பாட்டினை அவர்களிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக, இப்பொருளாதார மாற்றங்களினால் பலன் அடைந்துள்ள ஆதிக்க சாதியினைச்
சேர்ந்த நிலவுடமையாளர்கள், கந்துவட்டிப் பேர்வழிகள், தனியார் பள்ளி கல்லூரி
முதலாளிகள் உள்ளிட்ட புதுப் பணக்காரக்காரகள் உள்ளூர்த் தலைவர்களாகவோ, சாதிக் கட்சி/ சங்கத் தலைவர்களாகவோ உருவெடுக்கின்றனர்.
1.4 சாதிய உணர்வைத் தூண்டிவிடுதல்
விவசாயத் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ள சாயாவனம்,
குருதிப்புனல், தாகம், கரிசல், ஊருக்குள் ஒரு புரட்சி, மூங்கில் காட்டு நிலா, சேற்றில் மனிதர்கள் போன்ற புதினங்களில் சாதிய வகையில் ஒடுக்கப்பட்ட
மக்களே பண்ணையடிமைகளாகவும், விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவும் இருப்பதாகக் காட்டப் பெறுகின்றன.
இத்தொழிலாளர்களை நிலவுடைமையாளர்கள் அடிமையாகவும் இழிவாகவும் நடத்தும் போக்கு ஆகியன
இப்புதினங்களில் சித்திரிக்கப் பெற்றுள்ளன. மேலும், சாதி உணர்வைத் தூண்டிவிட்டு ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு அபாயகரமான
வன்முறைச் செயல்கள் ஏற்படுத்தப் பெறுகின்றன.
‘குருதிப்புனல்’ எனும் புதினத்தில் கோபால், சிவா ஆகியோர்கள் தொழிலாளர்களை ஒன்று திரட்டி நிலவுடைமை ஆதிக்கத்திற்கு
எதிராகப் போராட்ட உணர்வையும் விழிப்புணர்வையும், எழுச்சியையும், ஏற்படுத்தும் சூழலில் கண்ணையா நாயுடு தொழிலாளர்களிடம் சாதி உணர்வைத்
தூண்டிவிட்டு நிலவுடைமை எதிர்ப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையே நிலவும் உறவைத்
தூண்டித்துவிட முயற்சிக்கிறார். இதனை,
“சேப்புக் கொடியைப் பிடிச்சுகிட்டு அலைஞ்சீங்க,
ஒளிச்சுப் புடுவோன்
ஒளிச்சு… வடக்கேலேந்து பாப்பாத்திக்குப் பொறந்த மவன் ஒத்தன்
வந்து உங்க சாதிப்பொண்ணைக் கெடுத்துப்பூட்டான்…
ஏண்டா
பரதைப் பயல்வுளா, சாதி ஒற்றுமை வேணாம் உங்களுக்கு?”[4]
என்று கண்ணையா நாயுட, கோபால், சிவா போன்றவர்கள் மீது அவதூறு பரப்பிப் பொய் குற்றம் சுமத்தித்
தொழிலாளர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டிவிடுகிறார்.
இவ்வாறு தொழிலாளர்களிடம் சாதி உணர்வினைத் தூண்டிவிட்டு அவர்களிடையே
காணப்பெறும் ஒற்றுமையையும், நல்லுறவையும் சிதைப்பதன் மூலம் தொழிலாளர்களின் உழைப்பைத் தொடர்ந்து
சுரண்டும் மனநிலையை முதலாளிகளிடத்தில் காணலாம்.
எனவே “முதலாளித்துவம், மனிதச் செயல்முறைகளின் அனைத்துத்துறையிலும் மீண்டும் மீண்டும்
சுரண்டும் உறவுகளையும் வர்க்க வேறுபாடுகளையும் தோற்றுவித்துக் கொண்டேயிருக்கிறது. நிர்வாகத்தில்
தொழிலாளர்கள் உண்மையான பங்கு வகிப்பதை வளர்ச்சியுறச் செய்யும் முயற்சிக்குப் பலவிதமான
எதிர்ப்பை முதலாளி வர்க்கத்தினர் காட்டி வருகிறார்கள்”
என்ற கூற்று முதலாளிவர்க்கத்தினரின் செயல்பாட்டை மெய்ப்பிப்பதாக
உள்ளது எனலாம்.
1.5 திருநெல்வேலி மாவட்டத்தில் நாடார் சாதியமைப்பு
திருநெல்வேலி என்றால் சமீபத்தில் வருமானவரித்துறை நடத்திய இருட்டுக்கடை
அல்வா வரைக்கும் நினைவில் வந்து போகும் ஆனால் திருநெல்வேலியின் உண்மையான பொருள் 'புகழ்மிகும் நெல்லின் வேலி'.
இந்தப்பகுதி தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் அகண்ட இராமநாதபுரம் மாவட்டத்திற்குள்
இருந்ததால் இந்தப்பகுதி மக்கள் பற்றிக் காண்போம்.
சோழநாட்டிலுள்ள காவேரிபகுதி, மதுரை, தென் திருவாங்கூர் ஆகிய பகுதிகளில் இந்து நாடார் இன மக்கள் உருவானதாகக்
கூறப்படுகிறது. ஈழத்து வரலாற்றில் தென்னிந்தியக் கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்ந்து
கொண்டிருந்தவர்கள் எளிதாகப் புலம் பெயர்ந்து ஈழத்தை நோக்கி நகரத் தொடங்கினர். ஆனால் 'உள்ளே வெளியே' என்பதாக ஈழத்துக்குள் சென்றவர்களும் திரும்பவும் இங்கேயே வந்தவர்களும்
உண்டு. அது போல ஈழத்தில் வடக்குக் கடற்கரையோரத்தில்
வாழ்ந்து வந்தவர்களின் ஒரு பகுதியினர் தான் இவர்கள் என்றும் கூறப்படுகிறது. தொடக்கத்தில் சான்றார் என்று அழைக்கப்பட்டு பிறகு
சாணார் என்று மருவியது. யாழ்பாணத்தில் இருந்து வந்தவர்கள் இந்தப் பனைவிதைகளைக் கொண்டு
வந்து இங்கே பனை மரங்களை உருவாக்கினார்கள் என்று நம்புகிறார்கள்.
நெல்லை மற்றும் குமரி மாவட்டத்திற்குள் நுழையும் போதே நம் கண்களுக்குப்
பனைமரம் ஏராளமாகத் தெரியும். கேரளாவைப் போலவே
கண்களுக்குக் குளிர்ச்சி தரும் பச்சைப்பசேலுக்குத் தேவையான வெப்ப நிலை எங்கும் நிலவும்.
இராமநாத புரத்தை வறப்பட்டிக்காடு என்பது போல மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப்
பகுதியில் உள்ள தென்மாவட்டங்கள் குறிப்பாக நாங்குனேரி,
ஸ்ரீவைகுண்டம்,திருச்செந்தூர் போன்றவை வறண்ட பூமியாகக் கண்ணுக்கு எட்டியவரையில்
பொட்டல்காடாகவே தெரியும்.
மக்கள் வசிப்பதற்குத் தகுதியற்றதாக,
கருங்கற்கள் நிறைந்த, செம்மண் நிறைய மொத்தத்தில் பனைமரங்கள் வளர்வதற்கு ஏற்ற பூமியாக
இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள பூமியில் ஆழத்தில் சிவந்த களிமண் இருந்த போதிலும்
மேல்மட்டத்தில் உள்ள தளர்ச்சியான மணல் ஒவ்வொரு காற்று வீசும் பருவத்திலும். தென் மேற்கு
சுழற்சிக் காற்றால் கிழக்கு நோக்கி நகர்த்தப்படுகின்றது. இந்தக் காற்றும்,
நகரும் மணல் துகள்களும் மக்களுக்கு ஒவ்வொரு சமயத்திலும் ஏராளமான
பிரச்சனைகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில் வயல்வெளிகள்,
கிராமங்கள் கூட அமிழ்ந்து போயுள்ளன. இது போன்ற பூமியில் தான் இங்கு நாம் பார்க்கப்போகும்
நாடார்களின் வாழ்க்கை அமைந்திருந்தது.
இந்தியாவில் உள்ள மொத்த சாதிகள் உருவான கதைக்கு ஆயிரத்தெட்டுப்
புராண இதிகாச சம்பவங்களைக் கூறினால் இந்தச் சாதி என்ற மூலக்கூறு இன்று வரைக்கும் வளர்ந்து
கொண்டு இருப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. பொருளாதாரம் மற்றும் அவரவர் செய்து கொண்டிருந்த
தொழிலை அடிப்படையாக வைத்துத்தான் இந்தச் சாதி ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாப்பிடியாக
நகர்ந்து கொண்டு வந்தது. நாடார் என்று ஒரே
வார்த்தையில் சொன்னாலும் இதற்குள்ளும் ஏராளமான கிளைநதிகள் உண்டு. குறிப்பிட்ட சில பிரிவுகளை மட்டும் பார்க்கலாம்,
1.5.1 சுருக்குப் பட்டையர்
பனைத் தொழிலைச் சார்ந்து வாழ்ந்தவர்கள். நாடார் சமூகத்தில் 80 சதவிகிதத்தினர் இந்தச் சுருக்குப் பட்டையராகத் தான் இருக்கின்றனர்.
1.5.2 மேல் நாட்டார்,
தென் திருவாங்கூரிலும், நெல்லை மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் வசிக்கின்றனர். இந்த
வகையினர் பெரும்பான்மையாக அம்பாசமுத்திரப் பகுதியிலும்,
சொல்லக்கூடிய வகையில் தென்காசி,
சங்கரன்கோவில், ஸ்ரீவைகுண்டம்,,நாங்குநேரி போன்ற பகுதிகளிலும் வசிக்கின்றனர்.
1.5.3 நட்டாத்தி
நெல்லை மாவட்டத்தில் சாயர்புரத்திற்கருகில் நட்டாத்தி கிராமத்தைச்
சுற்றிலும் இந்த நாடார்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் சொற்பமாகவே
இருக்கின்றனர். வட்டிக்குப் பணம் கொடுப்பது, மற்ற வாணிபம், விவசாயம் போன்றவை இவர்களின் தொழிலாகும். ஆனால் காலப்போக்கில்
இந்த வகையில் உள்ளவர்கள் கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டனர்.
1.5.4 கொடிக்கால்
வெற்றிலை பயிரிட்டு வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அம்பாசமுத்திரம்,
தென்காசி போன்ற இடங்களில் அதிகமாக வாழ்பவர்கள்.
இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களைவிட சற்று
மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்தப் பனை மரங்களை
நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் வெற்றிபெற்றும் காட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரியத் தொடங்கிய
போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக்
காட்ட ஒவ்வொருவிதமான கட்டுக்கதைகளை கூறத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரைக்
கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே நாடார்களின் தொடக்கப் பாரம்பரியக் கதைகளிலும்
ஒரு சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்கள்.
1.6 மறுபக்கம் புதினத்தில் சாதியமைப்பு:
ஆங்கிலேயர்
வருகைக்கு முன்பு சமுதாயத்தின் உயர்மட்டத்திலிருந்த பிராமணீயம் தன் ஆதிக்கமும் செல்வாக்கும்
சிதைந்த நிலையில் தன்னை மீண்டும் சமூகத்தின் உச்சநிலையில் வைப்பதற்கும் தன் ஆதிக்க
வேர்களை மீண்டும் நிலைநாட்டுவதற்கும் உருவாக்கிய ஒரு வழிதான் வகுப்புக் கலவரங்கள் என்ற
இந்த நிகழ்வுகள். அதுதான் இந்துத்துவாக் கொள்கையாகவும்,
அதைப் பரப்புவதற்கு ஆர்.எஸ்.எஸ்
என்ற அமைப்பாகவும் இந்தியா முழுவதும் தன் வேர்களைப் பரப்பிக்
கலவரங்களை உண்டாக்குகிறது.
மறுபக்கம் புதினம் குடும்ப வரலாறாகவும்,
குமரி மாவட்ட வரலாறாகவும், சாதிக் கலவரத்தைச் சித்திரிக்கும் ஓவியமாகவும்,
படிப்பினை நல்கும் பாடமாகவும்,
புதின இலக்கியமாகவும் திகழ்கின்றது. புதினம் சொல்லும் செய்தி
என்ன?
என்பதை, மண்டைக் காட்டுக் கலவரம் என்ற புள்ளியில் தொடங்கி,
கலவரத்தின் உளவியல், நடுநிலையாளர்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும் பயங்கரம்,
அரசு எந்திரத்தின் தந்திரமான செயல்பாடுகள்,
இத்தனைக் கொடூரங்களுக் கிடையிலும் செயல்படும் மனிதநேயம் எனப்
புதினத்தின் ஒரு பயணத்தை அடையாளப்படுத்தலாம். மண்டைக் காட்டுக் கலவரம் மீனவர்கள்,
நாடார்களிடையே நடந்த மோதல். இது இந்து - கிறிஸ்தவ மோதலாக விளக்கப்பட்டு,
இந்தியா முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டு வகுப்புவாத அரசியலுக்கான
அடித்தளம் உருவாக்கப்பட்டது. மோதும் மதப் பிரிவினர்களிடையே செயல்படும் சாதித்தளம்,
சாதிமனம் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது.
மத மோதலாகக் கட்டமைக்கப்பட்ட சாதிகளின் முரண்,
சாதிக்குள்ளே செயல்படும் முரண்,
மீனவர்கள், நாடார் களிடையே புழுக்கையர்கள் என்ற பிரிவினரைப் பற்றிய மதிப்பீடு,
இக்கலவரத்தின் போது மூன்று இஸ்லாமியர்கள் மூன்று விதமாக செயல்படும்
காரணம் எனப் புதினம் கலவரத்தில் செயல்பட்ட சாதி அரசியலை முன் வைக்கிறது.
ஒவ்வொரு சாதியும் தம் சமூக இடத்தை இழந்து,
தீண்டத் தகாதவர்களாக, கீழானவர்களாக ஒடுக்கப்பட்ட வரலாறே இந்திய யதார்த்தம், இந்திய யதார்த்தம் என்பதே சாதிய யதார்த்தம்தான் என,
குமரி மாவட்ட சமூக அசைவியக்கம் வழி வெளிப்படுத்துவது இப்புதினத்தின்
மிக முக்கியமான விவாத மையம் ஆகிறது. மோதல்கள் மூலம் மேல்சாதிகள் தம் இருப்பை எப்போதுமே
உறுதிப்படுத்து வார்கள். தம் பீடங்களை இழந்த ஆதிக்கச் சாதிகள் மீண்டும் தம் வல்லாண்மையை
நிலை நிறுத்த இந்துமதம் வலுவான கருவியாக மாறிக் கொள்கிறது.
மறுபக்கம், ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கிடையே உள்ள காலாகால உறவை வெளிப்படுத்தும்
தொன்மங்களை மையக்கதையாடலோடு வலுவாக இணைத்து, வகுப்பு வாதத்தின், வைதீகத்தின் அரசியல் தந்திரத்தைக் கட்டுடைக் கிறது. இது புதினத்தின்
மிகக் காத்திரமான பயணமாக இருக்கிறது.
இந்தியா உருவாக்கம் புதினத்தின் இன்னொரு விவாத மையம். சாதிப்படிநிலையைக்
காப்பாற்றி இந்துக் கட்டமைப்பை முன்னிலைப்படுத்தும் இந்து ராஷ்ட்ர உருவாக்கம்,
சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து இந்துப் பண்பாடு என்ற ஒன்றில்
அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளையும் இணைத்துக் கொள்ளும் பண்பாட்டுத் தேசியத்தின் பெயரால்
நடைபெறும் உருவாக்கம், இதுவும் இந்து ராஷ்ட்ரத்தின், இந்துத்துவத்தின் இன்னொரு முகம்தான்.
இதற்கு மாற்று என்ன? தேசிய இனங்களின் மொழி சார்ந்த அடையாளங்களை முன் வைத்து சமத்துவம்,
சுதந்திரம், சனநாயகம் ஆகியவற்றின் அடிப்படையிலான ஒற்றுமை என புதினம் தன்
விவாதத்தை இன்னொரு புள்ளியிலும் குவிக்கிறது[5] என்று சி.சொக்கலிங்கம் புதினத்தின்
உள்ளடக்கத்தைத் துல்லியமாய்ப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
மறுபக்கம் புதினத்தைச் சமகால அரசியல் புதினமாக,
வரலாற்றுப் புதினமாக, மதவாத மற்றும் வகுப்பு வாத வன்முறைக்கு எதிரான புதினமாக,
சாதிய ஒடுக்குமுறை களுக்கு எதிரான புதினமாக,
நெய்தல் நில மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கும் புதினமாக,
பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன் வைக்கும் புதினமாக - எனப் பலவிதமாகவும் வாசிப்புக்கு
உட்படுத்த முடியும்[5] என்ற எஸ். பாலச்சந்திரனின் கூற்று முற்றிலும் பொருத்தமானது.
அடித்தள மக்களே இப்புதினத்தில்
பாத்திரங்களாக உலா வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையையும்,
போராட்டங்களையும் பொன்னீலன் அவர்கள் மிக அருமையாகச் சித்திரித்திருக்கின்றார்.
புதினத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் தத்தம் கொள்கையில் நின்று பேசுவதைப் பொன்னீலன் அவர்கள்
சிறப்பாக வடித்திருக்கிறார். பனைவிளை கிராமத்தில் இருக்கும் அம்மன் கோவிலில் பிள்ளையார்
சிலையை வைக்க முயற்சி நடக்கின்றது. அதனை எதிர்க்கின்ற செல்வராசு பாத்திரம்,
இந்தியா ஒரு நாடல்ல, நாடுகளோட ஒன்றியம். இங்கே பலமதம்,
பலமொழி, பலதெய்வம், பல பண்பாடு என்னுடையது எனக்கு முக்கியம். உன்னுடையது உனக்கு
முக்கியம். நமக்குச் சம்பந்தமில்லாத, நம்ம அம்மனுக்குச் சம்பந்தமில்லாத பிள்ளையாரைக் கொண்டு நம்ம
அம்மை தலைமேல ஏன் நிப்பாட்டுறிய? என்று முழங்குவதும், பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு அவ்வூர் இந்து இளைஞர் இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருக்கும் சதாசிவம்,
பிள்ளையார் தானப்பா நம் முடைய பண்பாட்டு அடையாளம் என்று பேசுவதும்,
தங்கமுத்து என்ற பாத்திரம், அது பண்பாட்டு அடையாள மில்லை, நம்ம அடிமைத்தனத்தின் அடையாளம்.
பிள்ளையார் வந்தா, அதோட கும்பாபிசேகம் வரும், மெல்ல ஒரு அய்யர் நுழைவாரு. அவரோட சமஸ்கிருதம் நுழையும். சர்க்கரைப்
பொங்கல் நுழையும். காலங்காலமாக நம்மளக் காத்து ரச்சிக்கின்ற முத்தாரம்மனும் மற்ற தெய்வங்களும்
கூண்டோட அடிமைப்பட்டு போயிருவாங்க! பிள்ளையார் வந்தா ஊர்வலம் வரும். ஊர்வலம் வந்தா
கலவரம் வரும்[6] என்று விளக்குவதும் அருமையான உரையாடலாகும். எதிரும் புதிருமான கருத்துகளால்
இப்புதினம் கட்டமைக்கப்பட்டு வாசக சுதந்திரத்திற்கான இடத்தையும் தருகின்றது.
பொன்னீலன் எழுத்தில் நையாண்டியும், கேலியும் நளினமாய்த் தவழ்கின்றது. இந்து இளைஞர் இயக்கம் வளர்கின்றது.
முத்தாரம்மன் கோயிலுக்கு 108 திருவிளக்கு பூசை வருகிறது.
கீதா ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் சொல்ல மற்றவர்கள் ஒலித்தடுமாற்றங்களுடன் அதையும் ஒப்புவிக்கிறார்கள்.
அம்மனை உற்றுப் பார்க்கிறார் வெங்கடேசன். தமிழ் தவிர எதுவும் அறியாத முத்தாரம்மன் தன்
செல்லக் குழந்தைகள் என்ன பிதற்றுகிறார்கள் என்று புரியாமல் திருதிருன்னு விழிக்கிறார்!
[7]
என்று, எழுதும் பொன்னீலன்,
மக்கா உன் முப்பாட்டன் என்னைய வேதக்காரன் கிட்ட இருந்து மீட்டான். பாட்டன் வைகுண்டசாமி
கிட்ட இருந்தும் மீட்டான். உன் அப்பன் சமஸ்கிருதத்துக்கிட்டே
இருந்து மீட்டான். நீ என்னைய இப்படிக் கைவிட்டுட்டு வேடிக்கை பார்க்கிறியே என் கதை
இவ்வளவுதானா? அவர் கண்களிலிருந்து கண்ணீர் முத்துமுத்தாக உதிர்கிறது. [8]
என்று காலந்தோறும் நடைபெற்ற போராட்டத்தைப் பொன்னீலன் எடுத்துரைக்கின்றார்.
மண்டைக்காட்டுக் கலவரத்திற்குப் பிறகு இருபது ஆண்டுகள் கழித்து,
அக்கலவரம் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் சேதுமாதவன் என்ற ஆராய்ச்சியாளனிடம்
அலெக்ஸ்,
ஆராய்ச்சி பண்ணணுமா மொதல்ல மதம் - சாதிக்குள்ள இருந்து ஆய்வாளன்
வெளியே வந்திரணும்... என்று கூறுவது அடிப்படை உண்மையாகும். இங்கு நிகழ்த்தப்படுகின்ற ஆய்வுகளெல்லாம் சாதி,
மத வட்டத்திற்குள்ளேதான்
நிகழ்த்தப்படுகின்றன. கொற்கை மீனவர்களின் ஆதித்தலைநகரமாக இருந்தது. கடற்கரையில் ஏராளமான
பொருள்கள் குவிந்து கிடந்தன. பல நாட்டு வணிகர்கள் கொற்கைத் துறைமுகத்தில் குவிந்ததாக
இலக்கியங்கள் சொல்கின்றன. வளமான வாழ்வுக்குச் சொந்தக்காரர்களாகத் திகழ்ந்த மீனவர்கள்
சமூகத்தில் கீழ்நிலைக்குச் சென்றதன் காரணத்தைப் பொன்னீலன் அவர்கள் அலெக்சு பாத்திரம்
வழியாக விவரிக்கின்றார்.
எல்லாம் வைதீகத்தோட திருவிளையாடல்! சனாதனம் இங்க நுழைஞ்சிது.
நுழைஞ்சி கடற்பயணம் தீட்டு என்குது. எங்க கடலாதிக்கமும் விழுகுது. பாருங்க,
திரைகடலோடியும் திரவியம் தேடினது ஒரு காலம்,
கடலே தீட்டாகி, நாங்க கீழானது இன்னொரு காலம். அப்புறம் மீன்பிடிச் சதினால நாங்க
இன்னும் கீழே போனோம். முத்து வணிக உரிமையும் எங்க கிட்ட இருந்து போச்சு. சிறுத்துப்
போய் நெத்திலி பிடிச்சுக்கிட்டு கிடக்கோம் என்று வீழ்ந்த வரலாற்றைப் படம் பிடிக்கின்றார்.
கிறிஸ்தவ மதம் பரவத் தொடங்கியவுடன் ஜாதிக்கட்டு மெல்ல மெல்ல
உடையத் தொடங்குகின்றது. அடிமைப் பட்டுக் கிடந்த ஜாதிகளுக்கு சமத்துவமாக நடத்தும் மதங்
களின் மீது நம்பிக்கை பிறக்கிறது. இந்து மதத் தீவிரவாதிகள் பொறாமையுடன் புழுங்குவதை
எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் மறுபக்கம் புதினத்தில் பாறை இடுக்குகள்ல ஓந்தி போல் ஒடுங்கிக்
கிடந்திய,
எங்க நிழலப் பார்த்தே நடுங்கினிய,
எத்துக்குத்தா எதிரே வந்தா, பெட்டைக் கோழி போல பணிஞ்சி குனிஞ்சிய,
சொன்ன ஊழியத்தைத் தப்பாமச் செய்திய,
இந்த அன்னிய தேசத்து வேதக்காரப் பயலுக கொடுத்த தைரியத்திலதான
இப்ப இப்படியெல்லாம் திமிரேறிப் போனிய...[9]
முலையை மூட ரவிக்கை, உடம்பு மூட சீலை, தலை மேல முக்காடு... இடுப்புல புத்தகம்... பிரியனையும் புள்ளையையுங்
கூட்டிக்கிட்டு நீங்க நடக்கிற நடை, எங்க மகாராணியே தோத்துப் போவாகளே! இவ்வளவு திமிர் எங்கிருந்துளா
வந்தது?[10]
பனைமட்டை சுமந்துக்கிட்டுத் திரிஞ்ச கருக்கு மட்டை நாயிகளெல்லாம்
இப்ப புத்தகங்களைச் சுமந்துகிட்டு பள்ளிக் கூடம் போகுது... அங்க அஞ்சி வருசம் படிச்சா,
அகில உலகத்திலயும் அதுகளுக்கு வேலை... நாயிக இந்துக் கடவுளுகளக்
கேவலப்படுத்து... ஆனா அதுக வீடுகள்ல தான் நம்ம லட்சுமிதேவியும்,
சரஸ்வதி தேவியும் கூசாமக் குடியேறுறாக.[11]
1.6.1 நடுங்க வைக்கும் சாதிக் கொடுமை
இந்தப் போக்குப் போனா தர்மம் எப்படி நிலைக்கும்?
என்று சித்திரிக்கின்றார். வர்ணாஸ்ரம தர்மம் தகர்ந்து போகிறதே
என்ற கவலை தொனிப்பதை உணர முடிகின்றது. மேற்கே போகப் போக வேறு சில சாதிகள் படும் துயரம்
நினைத்தாலே நடுங்க வைக்கிறது என்று பதினோராம் அத்தியாயத்தைத் தொடங்கும் பொன்னீலன்,
சாதிக் கொடுமையைத் தம் எழுத்தில் வடிக்கின்றார்.
திடீரென தூரத்தில் ஒரு கூவல்.
ஓஹோ... ஓஹோ... ஓஹோ...
குரல் வந்த திசையைத் துருவித்துருவிப் பார்த்தான் சிறுவன்.
அப்பா, எந்தப் பறவை இப்படிப் பாடுகிறது?
மகனே இது மனிதக் குரல்
மனிதக் குரலா? சிறுவனின் கண்களில் ஆச்சரியம். எதற்காக இப்படிக் கூவுகிறார்?
இது நம் நாட்டுச் சட்டம் மகனே,
வேகமாக நடந்தபடி பதில் சொன்னார் தந்தை.
நம் கண்களில் படக் கூடாத வனச்சாதியைச் சேர்ந்தவர் அவர்.
அப்பிடியுஞ் சாதிகள் இருக்கின்றனவா?
ஆம் மகனே...
அப்பா, இப்படிச் சத்தம் போடுவதில் அவனுக்கு என்ன லாபம்?
நான் இங்கே இருக்கிறேன் என்கிறான்,
மகனே!
எதற்காக
யாருக்காவது இந்தச் சத்தம் கேட்டால்,
தயவு செய்து கைதட்டுங்கள், நான் உங்கள் பார்வையில் படாமல்,
ஓடி ஒளிந்து கொள்ளுவேன் என்று நமக்கு அறிவிக்கிறான் மகனே...
ஏன் அவன் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும்?
அந்த அறியாப் பிஞ்சு முகத்தில் வியப்பு.
அவன் ரொம்ப ரொம்பக் கீழான சாதிப் பிறவி,
மகனே. நம்மைப் போன்ற உயர்சாதியினர் அவனைக் கண்ணாலப் பார்த்தாலே
தீட்டு. நாம் அருகே வருகிறோம் என்பதைக் கைதட்டி அவனுக்கு அறிவித்தால்,
மரத்தின் பின்னோ, அல்லது ஆற்றிலோ, குளத்திலோ ஒளிந்து கொள்வான். அப்படித் தன்னைப் பாதுகாத்துக்
கொள்வதற்காக அவன் இப்படிக் கத்துகிறான்.
நாம் கை தட்டா விட்டால்
அவன் ஒளிந்து கொள்ள முடியாது. மகனே,
உயர் சாதியினரின் கண்ணில் பட்டால்,
அவர்கள் தம் இடுப்பில் இருக்கும் வாளால் அவனை வெட்டிக் கொன்று
விடுவார்கள்.
ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?
நம் தர்மம் அப்படித்தான் சொல்கிறது மகனே...
இது அதர்மம் அப்பா [12]
என்று சாதிக் கொடுமையை விளக்கும் எழுத்தாளர் பொன்னீலன் புதினத்தில் அடிமைச் சந்தையை
ஓவியமாய்த் தீட்டிக் காட்டுகின்றார். அடிமை முறையை ஒழிப்பதற்குச் சட்டம் உருவான வரலாற்றையும்
எடுத்துரைக்கின்றார்.
1.6.2 சமத்துவப் பார்வைகள்
அச்சு இயந்திரம் வந்தபோது மக்கள் வியந்த வியப்பைப் பொன்னீலன்,
இனிப் பனையோலையும் வேண்டாம். எழுத்தாணியும் வேண்டாம். இதுக்காகவும்
வெள்ளைக் காரன் ஒரு பெரிய பூதத்தக் கண்டு பிடிச்சிருக்கான். காயிதத்த அந்த புதுப் பூதத்துக்க
வாயில செருகினாப் போதும். நாம என்ன நினைக்கிறமோ அது மாதிரி அந்தப் பூதம் கண்மூடித்
திறக்குறதுக்குள்ள எழுதித்தரும்[13] என்று வரைகிறார்.
பண்பாட்டுப் படையெடுப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்ற
குரல் எங்கும் ஒலிக்கின்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டுத் திணிப்பைத் தொடர்ந்து
செய்து வருகின்றது. மறுபக்கம் புதினத்தில் சதாசிவன் என்ற பாத்திரம் பேசுகிறது.
சார்,
இந்த நாட்டுக் கிராமக் கோயில்கள்ல பழைய பூசாரிமார் பாமரத்தனமா
என்னென்னவோ பண்ணிக் கிட்டுக் கிடக்காணுக. ரப்பிஷ். எல்லாத்தையும் மாற்றணும். அங்கே
குடியிருக்கிற பேய்களத் துரத்தணும். அந்த இடங்கள்ல ராமனையும் கண்ணனையும் பிரதிஷ்டை
பண்ணி,
பூசையையும் பிராமணன் கையில கொடுக் கணும். பத்து வருஷத்தில இந்த
நாடு நம்ம காலடியில விழும் இது எவ்வளவு ஆபத்தான போக்கு. [14]
178ஆம் பக்கத்தில் சதாசிவன் இப்படிப் பேசுவதற்கு 722ஆம் பக்கத்தில் வெங்கடேசன் பதில் அளிக்கிறார்.
நம்பிக்கையுள்ளவங்க நம்பிக்கையுள்ள கடவுளத் தங்கள் நம்பிக்கைப்படிக்
கும்பிட சுதந்திரமிருக்கணும். நம்பிக்கை இல்லாதவங்க நம்பிக்கையில்லாம வாழவும் சுதந்திரம்
இருக்கணும். வைதீகம் ஒரு பெரு வெள்ளமாக எல்லாத்தையும் மூழ்கடிச்சி,
எங்கள அடிமைப்படுத் துறதைத்தான் என்னால சகிச்சிக்க முடியல்ல.
அம்மனுக்குத் தெரியாத மொழியில, அம்மனுக்குத் தெரியாத சடங்குகள,
அம்மனுக்குத் தெரியாதவங்க இப்படிக் காசுக்காகச் செய்யிறது எந்த
வகையில் நியாயம்? அவரவர் மொழியில அவரவரும் செய்யி. எல்லாச் சாதியும் செய்யி. பெண்ணும்
ஆணும் செய்யி. இப்பிடி ஜனநாயகப்படணும் பண்பாடு. நான் இந்து மதத்த ஏத்துக்கணும்னா,
முதல்ல அது என்னைய ஏத்துக்கணும். உங்களப் பார்த்ததும் கூச்சப்
பட்டு,
எங்க மீன் குழம்புச் சட்டியையும்,
பாளையரிவாளை யும் மறச்சி வச்ச காலம் மலையேறிப் போச்சு. இனியாவது
எங்கள சமத்துவமா நடத்த முன் வாருங்க.[15]
எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் வளமான சிந்தனைகள்,
சமத்துவப் பார்வைகள் புதினத்தில் பல பாத்திரங்களின் உரையாடல்கள்
வழியே வெளிப்படுகின்றன.
”ஒற்றைத் தன்மையின் யுகம் முடிஞ்சி போச்சி. பிறரை மதிக்கவும்,
நேசிக்கவும் தெரியாதவனுடைய கதை இனி எடுபடாது... எந்த மதமாக இருந்தாலுஞ்
சரி,
சாதியாக இருந்தாலுஞ் சரி...” [16]
என்று கென்னடி பாத்திரத்தின் மூலமாக பொன்னீலன் தெளிவுபட எடுத்துரைக்கின்றார்.
பண்பாட்டுத் தேசியம் - பன்முகத் தன்மை குறித்து வாசகர்களைச் சிந்திக்கத் தூண்டுகின்றார்
பொன்னீலன்.
நில உச்சவரம்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததும் பாட்டாளி மக்களுக்குச்
சொந்த நிலம் வருகின்றது. உழைக்கின்றார்கள். முன்னேறுகின்றார்கள். கிறிஸ்துவம் மூலமாக்க்
கல்வி அறிவு பெற்று உத்தியோகத்திற்குச் செல்கின்றார்கள். ஆதிக்கம் செய்துகொண்டிருந்த
உயர் சாதி வர்க்கம் ஆதிக்கத்தை இழக்கின்றார்கள். இதுதான் இந்து - கிறிஸ்தவப் பகைமைக்கு
அடிப்படைக் காரணம் என்று கூறும் ஜோயல் பாத்திரம்,
பழைய வெறியுள்ள சிலர், ஏதாவது பண்ணி ஆதிக்கத்த மீட்க முடியுமா என்று பாக்குறாங்க?
அவங்களால ஆயுதங்கள எடுத்துப் போராட முடியாது. அதுக்கு அடியாள்
வேணும். அதுக்காகத்தான் அப்பாவியான நாடார்கள், சாம்பவர்கள், ரசக்காலர்கள் இவர்களயெல்லாம் உணர்ச்சி வசப்படுத்துறாங்க[17]
என்கின்றார்.
குமரி மாவட்டத்தில கலவரம் நடந்த பல்வேறு இடங்களில் பலதரப்பட்ட
மனிதர்களைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டி இருக்கின்றார் எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள்.
‘செம்பருத்திவிளை ஊரில், நான் ஒரு கத்தோலிக்கன். சாதியில் நாடார். என் பேரு கிறிஸ்துதாஸ்’
என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்ற பாத்திரம். [18]
“சார்,இஞ்ச உள்ள இந்துக்கோயில் மைதானங்கள்ல பாத்தீயன்னா,
சாயங்கால நேரம் கம்பு வச்சி ஆர்.எஸ்.எஸ்.கார கவாத்து நடத்திட்டிருப்பாவ.
சாஸ்தாங் கோயில்ல வச்சித்தான் அவிய சாகா நடக்கும். அப்பதான் அவிய பிரச்சாரம் பண்ணுயது.
கிறிஸ்தவன்தான் நம்ம எதிரி. அவந்தான் நம் சொத்துக்கள மோட்டிச்சான்,
அதிகாரத்தப் பிடுங்கினான். அவன ஒழிக்கணும். இப்படியெல்லாம் தப்பான
செய்திகளக் கொடுப் பாவ’. இந்த கசப்புணர்வு தான் ஆங்காங்கே மோதல்களா உருவாச்சி”.[19]
என்று பேசுகின்றது.
மாடத்தட்டுவிளை என்ற ஊருக்கும்,
வில்லுக்குறி என்ற ஊருக்கும் ஏன் சண்டை வந்தது?
என்ற ஆராய்ச்சியாளன் சேதுவின் வினாவுக்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்
கூறும் பதிலின் மூலம் மலையாளத் தொடர்பு புலனாகின்றது. ‘கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டோட
சேர்ந் ததும், மலையாள உணர்வு உள்ளவியளுக்குப் பாதுகாப்பு இல்லாதது மாதிரி ஆகுவு. பக்க பலமா,
அவியளுக்கு ஏதோ ஒண்ணு தேவைப்படுவு. தங்களைப் பெரும்பான்மையாக்
கிடணும் என்கிற நிர்ப்பந்தம். இதுக்கு வசதியா ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வந்து சேருவு’[20]
என்கின்றார்.
உதவி, சேவை, தொண்டு என்பதெல்லாம் இந்தச் சுயநல வாழ்க்கையில் படிப்படியாய்
தேய்ந்து கொண்டு போகின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று. மறுபக்கம் புதினத்தில்
முத்து என்ற கதாபாத்திரம் வழியாக, இருபத்து நாலுமணி நேரமும் மனுசர் விலைப் பொருளாயிட்டா,
அப்றம் சொந்த வாழ்க்கையாக என்னதான் மிஞ்சும்?[21] என்று பொன்னீலன் அவர்கள் மனிதத் தன்மையோட வாழ வழிகாட்டுகின்றார்.
1.6.3 மாட்டுக்கறி சாப்பிட்டாத் தீட்டு
மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை இழிவாகக் கருதத் தொடங்கிய காலம்
எது என்று இந்த புதினத்தில் பொன்னீலன் ஆய்வு செய்கின்றார். புராணக் கதைகளை எடுத்துக்காட்டி
முத்து என்ற பெண் பாத்திரம் வழியாகப் பொன்னீலன் பேசுகின்றார். ‘இப்படித்தான் அண்ணே,
கதைகளைக் கட்டி மக்களை நம்ப வச்சி அமுக்கிப் போட்டானுவ,
திருட்டுப் பயலுவ. கள் இறக்கினவன்,
உழுது பயிர் செய்தவன், மீம்பிடிச்சவன், வேட்டையாடினவன் இப்படி இப்படியே கீழ்ச்சாதிகளைப் பற்றின கதைகளையெல்லாம்
நுழைஞ்சி பாத்தா, உள்ளே வைதீகம் உட்காந்திருக்கது தெரியும். நிஷா அக்கா சொல்லுவாவ,
நம்மள ஒடுக்கி அந்த ஒடுக்கு முறைய நியாயப்படுத்துறதுக்காக உண்டாக்கப்பட்டது
தான் இந்தக் கதைகளாம். இப்ப நாம என்ன செய்யணும். இந்தக் கதைகள உடைச்சி,
அதுகளுக்குள்ளே பதுங்கியிருக்கிற மனுவ மக்கள்கிட்ட காட்டணும்’[22]
என்கின்றார்.
நம்ம சனங்களுக்கிருக்கிற சாதி வெறியச் சகிக்க முடியல்ல என்று
குமுறுகிறார் கக்கூஸ் கழுவும் குருசாமி. அவர்தம் குரலை எங்கள இவ்வளவு இழிவா நினைக்கிறாகளே,
திருமலை நாயக்கர் தளபதி மதுரை வீரன் யாரு?
பூலுத்தேவன் தளபதி ஒண்டி வீரன் யாரு?
கட்டபொம்மன் தளபதி சின்னத்தம்பி - சப்பாணி மாடன் யாரு?
வரலாறு தெரியாம எங்களக் கேவலமா நினைக்காக! ஏன் தெரியுமா?
நாங்க மாட்டுக்கறி சாப்பிடுறமாம். வெள்ளக்காரன் சாப்பிட்டா அது
தீட்டில்லையாம். நாம சாப்பிட்டாத் தீட்டாம்...[23] என்று பதிவு செய்கின்றார் பொன்னீலன்.
1.6.4 உச்சக்கட்டம்
எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் ஜீவானந்தத்தின் சீடர். இந்தப்
புதினத்தில் ஜீவானந்தத்தின் பெருமைகளைப் பற்றி எழுதும்போது அவர் எழுத்து மின்னுகின்றது.
தோலைத் தொட்டவன் செருப்பாய்ப் போனான் என்று வருந்தும் குருசாமி, ‘ஜீவானந்தம் என்னு ஒரு தலைவரக் கேள்விப்பட்டிருக்கியா?
ரொம்பப் பெரிய ஆளம்மா என்று கூறி ஒரு சம்பவத்தை விளக்குகின்றார்.
தொழிலாளி வர்க்கத் தலைவர், ருஷ்ய நாட்டு அதிபர் ஸ்டாலின் செருப்புத் தைக்கும் சக்கிலியத்
தம்பதிக்குப் பிறந்தவர்’[24] என்று கூறித் திட்டத்தை உணர்ச்சிமயமாக்கியதை எடுத்துரைக்
கின்றார்.
‘அண்ணல் அம்பேத்கர் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?
எங்கள் இனத்தில பிறந்து எங்களத் தூக்கிவிடத் தோள் கொடுத்த கடவுள்மா
அவரு. அவர் வாழ்க்கை ரொம்ப சோகமானது... படிச்சா அழுகை வரும்’[25] என்று கூறி சில சம்பவங்களைப்
பட்டியலிடுகிறார்:
1923இல், தான் பரோடா சமஸ்தான ராணுவச் செயலாளராக இருந்தபோது,
தன் சாதி தீண்டத்தகாதது என்கிற ஒரே காரணத்தால்,
தான் கையெழுத்துப் போட்ட கோப்புகளைத் தொட மறுத்து,
வீசி எறிந்த தன் உயர்சாதிச் சேவகன்மார்...
தான் தங்கியிருந்த விடுதிக்கே குண்டாந்தடிகளோடு திரண்டு வந்து,
தன்னைச் சூழ்ந்து யார்டா நீ என்று கேட்ட சாதி வெறியர்கள். நான்
ஒரு இந்து என்று சொன்னதும், திருட்டு அயோக்கியா, நீ ஒரு பறையன். பார்சிகளுக்கென்றே கட்டிய விடுதியை அசுத்தப்படுத்திய
பறையன். உடனே வெளியேறு, என்று தன்னைத் தடிகளால் தாக்கி... தன்னை வெளியே தள்ளிய அந்த
மிருக முகங்கள்...
போக்கிடமில்லாமல், தான் பெட்டி படுக்கையோடு ரோட்டோரம் மரத்தடியில் உட்கார்ந்து
தேம்பித் தேம்பி அழுதது...
1924இல், சவுக்கார் குளத்தில் தன் மக்களோடு தண்ணீர் குடிக்கப் போராடியது...
1929 சில்பன் நகர் மாநாட்டில் 6000 ஒடுக்கப்பட்டோ ருக்குப் பூணூல் அணிவிக்க ஏற்பாடு செய்து,
அப்படியாவது போகுமா இந்தத் தீட்டு என்று முயற்சி பண்ணித் தோற்றது...
1930இல், 8000 பேரைத் திரட்டி, நாசிக் ராமர் கோவிலில் கும்பிடப் போய் உதைபட்டது... [26]
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல்,
தன் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதி கேட்டுச் சண்டை
போட்டுப் பெற்ற வெற்றியைக் காந்தி அநியாயமாகத் தட்டிப் பிடுங்கித் தன் மக்களை அனாதைகளாக்கியது...
அவர் மனதுக்குள்ளே நீண்ட காலமாக நடந்து கொண்டிருந்த போராட்டம்
இன்று உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. சிறுவனாக வண்டியில் போய்க் கொண்டிருந்த போது,
தான் ஒரு தலித் என்று தெரிந்ததும் வண்டியைக் குடைசாய்த்துத்
தன்னை நடுபாதையில் உருட்டி விட்டானே ஒரு உயர்சாதி வண்டிக்காரன்,
அப்போது பட்ட அடியின் வலி அது. இப்போதும் வலித்தது. படித்து
வளர்ந்து உலகப் புகழ்பெற்று, விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதி...
யார் சொன்னது நான் எழுதினேன் என்று? அதிலுள்ள வரிகளில் எத்தனை வரிகளை என் வரிகளாகச் சொல்ல முடியும்?
பெரும்பான்மையான வரிகள் அன்றைய ஆதிக்க சக்திகள் என் கைகளைப்
பிடித்துத் தாங்களே எழுதிக் கொண்டவைதானே! எப்படியோ போகட்டும்,
இந்த அரசியல் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் சாசனங்களாக்கி,
வருடங்கள் 5 உருண்டோடிவிட்டன. என் மனமோ திகுதிகுவெனத் தீப்பற்றி எரிந்து
கொண்டிருக்கிறதே! தேசமே, இந்து சமூகமே, என் மக்களின் இழிவு நீக்க நீ என்ன செய் திருக்கிறாய்?
நான் முதிர்ந்து விட்டேன். உதிரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
அதற்குள் நான் முடிவு செய்தாக வேண்டும். நான் ஒரு இந்துவாகவே இறப்பதா?
இந்து சமூகம் என்றாவது எங்களைத் தங்கள் சொந்தங்களாக முழு மனதோடு
ஏற்று,
சமத்துவமாகக் கொண்டாடுமா? [27] அம்பேத்கர் அவர்களை பொன்னீலன் வாசகர்களின் நெஞ்சத்தில்
பதித்து விடுகின்றார்.
1.6.5 மண்டைக்காட்டுக் கலவரம்
வெங்கடேசன் என்ற பாத்திரம், 461ஆம் பக்கத்தில் இந்தியா ஒண்ணா ஒற்றுமையாத்தான் இருக்கணும். ஆனா
அந்த ஒற்றுமை தேசிய இனங்களின் சமாதி மேலே கட்டப்படுறதில்லை. அது நிலைக்கவும் நிலைக்காது.
தேசிய இனங்களின் வளர்முகமான சமத்துவக் கூட்டுறவின் மேலே எழுப்பப்படுகிற ஒற்றுமையே நிலைக்கும்.
ஒற்றுமை யும், சமத்துவமும் பிரிக்க முடியாதது என்று பேசுவதும்.,
இந்தியா ஒரு நாடல்ல, பல நாடுகளோட ஒன்றியம். தமிழ்நாடு,
கேரளா நாடு, ஆந்திரா நாடு, வங்க நாடு, இப்படிப்பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். ஒவ்வொரு நாட்டுக்கும்
மொழி தனி, உடை தனி, உணவு தனி, பண்பாடு தனி, நம்முடைய தேசிய இன அடை யாளங்களை இழந்தா நம் வாழ்வும் வளர்ச்சியும்
போச்சி. இந்திய ஒன்றியத்துக்கு அர்த்தமே போச்சி [28] என்று பேசுவதும் புதினம் வலியுறுத்தும்
கருத்து களாகக் கொள்ளலாம்.
இந்தக் கலவர நிகழ்வுகள் பற்றிய உண்மைகள் நாடார்,பரதவர், முக்குவர், புலையர் என்றும், இந்து நாடார், கிருத்தவ நாடார் என்றும் இந்து நாடார்,
இஸ்லாமியர் என்ற எதிரிடைகளின் வழியில் நிகழ்ந்தவற்றைத் தனக்கேயுரிய
எளிமையான மொழியில் விவரித்துச் செல்கிறார். குமரி மண்ணின் 400 ஆண்டுகால வரலாற்றைச் சொல்லிச் செல்வதால்,
பல்வேறு பாத்திரங்களை உலவவிட்டு ஒரு வரலாற்று நாவலென படைத்திருக்கிறார்.
குமரி மாவட்ட வரலாற்றில் புதைந்திருக்கும் மர்மங்களையும் மௌனங்களையும் தன் புனைவு மொழியில்
கட்டமைத்திருக்கிறார் என்றும் இதைக் கொள்ளலாம்.
மேலும் வரலாற்றின் உள்ளடுக்குகளில் நுழைந்து தெரியாத உண்மைகளையும்,
அதன் நாட்டார்வழித் தொல்கதைகளையும் அங்கு வைதீகம் நுழைந்து நாட்டார்
வாழ்வையும், பண்பாட்டையும் அழித்துத் தன் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றதையும் அவற்றினூடாக விளைந்த
காரணிகள் மண்டைக்காட்டு கலவரத்திற்கான விதையாக வளர்ந்து பெரும் நாசத்தை உண்டாக்கி மோதலில்
முடிந்ததையும் கதையாகவும் வாசிப்பில் உணர்த்துகிறார்.
1.6.6 சாதி வெறி அரங்கேற்றம்
”சார், மேலவள்வு படுகொலை கேள்விப்பட்டிருக்கீங்களா?
”ஆ....மா...”
“இந்தப் பொண்ணு ஊரும் மேலவள்வுப் பக்கந்தான். பணப்பதிவேட்டில
பார்த்தோம். வசார்ச்சபோது வெட்டுப்பட்டு இறந்து போனதில ஒருத்தர் இந்தப் பொண்ணுக்கு
சொந்தக்காரர் போல.
“மேலவளவில நடந்தது சாதா மோதல் என்னா நினைக்கிறீங்க. சாதி வெறியோட
மிகக் கொடூரமான அரங்கேற்றம் அது. நாட்டுக்குக் குடியரசுத் தலைவரா ஒரு தலித் வரமுடியும்.
ஆனா ஒரு பஞ்சாயத்துத் தலைவரா வர முடியாது[29] என்கிற உண்மை அங்க அப்பட்டமா வெளிப்பட்டிருக்கு.
1.6.7 சாதிய ஒடுக்கு முறை
ஓய்வு பெற்ற ஆசிரியரான வெங்கடேசனும்,
இந்துத்துவ இயக்கங்களோடு தொடர்புடைய கோவை மாவட்டத்தைச் சேர்ந்த
சேதுமாதவன் என்ற இளம் ஆய்வாளனும் கலவரத்திற்கான காரணிகளையும்,
தரவுகளையும் சேகரிப்பதற்காகப் பயணம் செய்து,
பாதிக்கப்பட்ட, கலவரத்தைப் பார்த்த மனிதர்களிடம் ஆதாரங்களைப் பெறுவதற்கு நிறைய
உழைக்கிறார்கள். அந்த மனிதர்கள் கலவர நிகழ்வுகளைச் சொல்வதாகவும்,
ஒவ்வொரு நிகழ்வுப் போக்கின் பின்னே கதை அடுக்குகள் ஒன்றன் பின்
ஒன்றாக உருவாக, இப்புதினம் புதிய அழகியல் உத்திகளோடு விரிந்து செல்கிறது. இப்புதினத்தின் வடிவமானது
நமது மரபில் விக்ரமாதித்யன் கதை போலவும், திரைச் சீலைகள், படிகள், கட்டில்கள் கதை சொல்வது போன்ற உத்தியில் கதைக்களம் நாட்டார்
வழக்காற்றுச் சாயலில் முன்னும் பின்னுமாக நகர்ந்து செல்கிறது.
வெங்கடேசன், சேதுமாதவன் ஆகிய இருவரும் சமகாலத்திலும் அவர்கள் பார்த்த மனிதர்கள்
சொன்ன விபரங்கள் சென்ற காலத்திலும் அமையும் விதமாக நிகழ்வுகள் உள்ளன. வெங்கடேசன் என்ற
பாத்திரத்தைத் தன் வார்ப்பாக உருவாக்கிக் கதையில் உலவவிட்டிருக்கிறார். சேதுமாதவன்
தன் பிறப்பில் புதைந்துள்ள மர்மங்களை அறிவதற்கான முயற்சியில் முத்து என்ற பெண்ணோடு
கொள்ளும் காதல் உணர்வையும், தன்னிடம் உள்ள உயர்சாதி மனக்கட்டமைப்பு –
தன் பிறப்பைப் பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன்,
புதிய உணர்வோடு, விதிகளைப் பற்றிய கற்பிதங்களை நீக்கியவனாகவும் உணர்வதனை ஆசிரியர்
இக்கதையோடு ஊடிழையாகச் சேர்த்திருக்கிறார். நிகழ்காலக் கதை நேர்கோட்டுக் கதை சொல்லல்
முறையிலும், சென்ற காலத்தை 400 ஆண்டுகளுக்கு முன்னிருந்து குமரி மாவட்ட நிலப்பரப்பில் வாழ்ந்த
மக்கள் வாழ்வியலை, காலந்தோறும் ஆட்சியாளர்களின் சட்ட திட்டங்களும் அம்மக்களுடைய
வாழ்வியலுக்கு எதிராக இருந்ததையும் எளிமையாகப் புனைவு மொழியில் வேறொரு உத்தி சார்ந்து
கதையை நகர்த்துகிறார்.
மேலும் கால அடுக்குகளில்
புதைந்துள்ள நாடார், முக்குவர், புலையர், பரதவர் போன்றோரின் தொல்கதைகளின் வழியே பயணிக்கும் இவருடைய கதை
சொல்லும் முறையானது ஓர் புதிய அழகியல் பரிமாணம் கொண்டு தொடர்ந்து செல்கிறது. இவரது
விவரணை மொழியானது, குறியீட்டு வடிவம் கொண்டு, தொல்கதை பேசும் பகுதிகளோடு இணைத்துப் பார்க்கும் பொழுது உயர்ந்த
அர்த்தப் பரிமாணங்களோடு வெளிப்படுகிறது. இந்தப் பிரதியை ஆழ்ந்த வாசிப்புக்குட்படுத்தும்
போது,
பல்வேறுவிதமான வாசிப்புகளை ஏற்படுத்துவதையும்,
புரிந்து கொள்ள முடிகிறது. வரலாற்றுப் புதினமாகவும்,
மதவாதம் மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரானதாகவும்,
சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரானதாகவும்,
நெய்தல் நிலமக்களின் வாழ்வைச் சொல்லுவதாகவும் இப்புதினத்தை நாம்
உணர முடிகிறது. அதேசமயம் பண்பாட்டுத் தளத்தில் பன்மைத் தன்மையை வலியுறுத்தும் ஒன்றாகவும்
இதை நாம் காணலாம்.
விமர்சகர் சொக்கலிங்கம் கூறுவதுபோல், ‘இது பன்முகங்கள் பலகுரல்களில் பேசுவதும்,
அதோடு சொல்லப்படாத வரலாறுகள் கட்டமைக்கப்பட்ட வரலாறுகளிலிருந்து
அமுக்கப்பட்டிருக்கும் உணர்வுகள் மறைக்கப்பட்டதையும்,
நினைவுத் தடங்களிலிருந்து வன்மையாக நீக்கப்பட்டதையும் சொல்வதோடு,
வாய்மொழி வரலாறு, நாட்டார் கதைகள், நாட்டார் மரபுகள் என்று நீண்ட பக்கங்களில் இதன் விவரணை மொழி
நம்மோடு பேசுகிறது. குறிப்பாக நாடார்இன மக்களின் தொன்ம வரலாற்றிலிருந்து இன்றைய இருப்பின்
யதார்த்தம் வரை எளிமையான மொழியில் சொல்கிறார். பொன்னீலனின் கதை சொல்லும் மொழியானது
ஆரவாரமற்ற அலங்காரமற்ற வெளிப்பாட்டு மொழியாக இருக்கிறது. ஒருசில இடங்களில் இவருடைய
வெளிப்பாட்டு மொழி கலை அழகியல் அம்சங்க குறைவாக இருப்பதாகவும் படுகிறது.’[30]
குமரி மாவட்டக் கடந்த கால வரலாற்றின் உள்நுழைந்து பயணிக்கையில்
அங்கே உள்ள பெரும்பான்மை நாடார் சாதியின் வரலாற்றை அழுத்தமாகச் சொல்லும்போது குமரியின்
வரலாறு நாடார் சாதியின் வரலாறு மட்டும்தானா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
1700களில் திருவாங்கூர் மன்னர் பலராம வர்மாவிற்குப் பின்னால் யார்
மன்னராவது? என்ற சூழலில் நாடார் சமுதாயம் மக்கள்வழி, மருமக்கள்வழி எனப்பிளவுபடுகிறது. அதன் வளர்ச்சிப் போக்கின் விளைவுகள்
அந்தச் சமுதாயத்தில் ஆழ்ந்த பாதிப்பினை ஏற்படுத்துகிறது. அதையடுத்து ஏற்பட்ட சேலை விதிகள்,
அடிமைச் சாதிகள் என்ற இழிவுபடுத்துதலுக்கிடையே தோள் சீலைப் போராட்டம்
போன்ற கலக நிகழ்வுகளை விவரிக்கிறார்.
கலவரங்களுக்குப் பின்னே சமாதானத்திற்கான முன்முயற்சியில் குன்றக்குடி
அடிகளார் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், இந்தியப் பொதுஉடமைக்கட்சியும்,
தி.க.வும் கலவரப் பகுதிகளிடையே சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதையும்
இப்புதினத்தில் விவரிக்கிறார்.
இந்தப் புதினம் பொன்னீலனின் புதிய தரிசனங்கள் என்ற படைப்பிலிருந்து
முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அந்தப் புதின இறுதியில் புதிய உண்மையை நோக்கி இடதுசாரிச்
சக்திகள் பயணிக்க வேண்டுமென்ற முடிவையும், ஒடுக்கப்பட்டவர்கள் விடுதலை, வர்க்கமற்ற சமுதாயத்திற்கான விடுதலை என்ற இலக்கை வலியுறுத்துவதுமான
சார்பு நிலையை அதில் வலியுறுத்தியிருந்தார். ஆனால் இந்தப் படைப்பில் இதில் வரும் மாதவன்
என்ற பாத்திரம் சொல்வதன் வழி, ‘அரசியல் ஆதிக்கத்திற்காகப் பண்பாட்டுத் தளத்தில் திட்டமிட்டு
தொடங்குகிற மோதல்தான் வகுப்புவாதம் எனப்படுகிறது. இது மிகவும் ஆபத்தான போக்காகும்.
ஒன்றும் அறியாத அப்பாவி மக்களை இது எதிர் எதிராக நிறுத்தி அழித்துவிடும்’[31] என்று கூறுகிறார்.
1.6.8 சாதி எனும் நச்சுப்பாம்பு
சாதி எல்லை மீறிய கொடுமையானது நச்சுப்பாம்பைவிட நச்சுத்தன்மையானது
என்று எழுத்தாளர் பொன்னீலன் அவர்கள் சின்னநீலன் என்ற பாத்திரத்தின் வாயிலாகக் குறிப்பிடுகின்றார்.
சாதி எனும் பாம்பு
சண்டித் தனம் பண்ணுதடா...
மக்களை இனம் பிரிச்சி
மாறாட்டம் செய்யுதடா.
சாதியம் பாம்பச்
சகியாதே என் மகனே
ஒருத்தி பெத்த மக்கா
ஒண்ணாக வாழ்ந்திடுங்கோ... [32]
1.7 தொகுப்புரை
இவ்வாய்வேட்டின் நான்காம் இயலாகச் சாதி என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட்தில்
வகுப்புவாத அடிப்படியில் சாதிப் பிரிவினை காணப்படுகிறது. இதில் மாட்டுக்கறி தின்பவரை
பார்த்தாலே திட்டு என்கிற கொடுமைகள், அடிமைகள் விற்பனைச் சந்தை என மனிதத் தன்மை இல்லாமல் நடந்து கொள்ளும்
விதம். எனவே இன்றைய சூழலில் பண்பாட்டுத் தளத்தில் தீவிரமான செயல்பாட்டின் அவசரத் தேவையை
இப்புதினத்தின் வாசிப்பின்வழி உணரமுடிகிறது. ஏனென்றால் 1940களிலிருந்து 1960கள் வரை பண்பாட்டுத் தளத்தில் தமிழ்த் தேசியத்தை முன்வைத்து
இயங்கிய திராவிட இயக்கங்கள் அரசியல் அதிகாரம் பெற்றன. இறுதியில் பொன்னீலன் பண்பாட்டுத்
தளத்தில் பண்பாட்டின் பன்முகத் தன்மையை ஏற்றுக் கொண்டு,
நாட்டார் வழிபாட்டு வாழ்முறையை அழுத்தமாக வலியுறுத்துகிறார்.
ஆனால் நாட்டார் வழிபாடு என்பது இறுக்கமான சாதியத்தோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்று என்ற
உண்மையும் அது மிக அபாயகரமான போக்குக்கு இட்டுச் செல்லும் என்பதை நாம் எச்சரிக்கையோடு
அணுக வேண்டும் என்பதே இவ்வியலில் கண்டறிந்த முடிவுகள் ஆகும்.
அடிகுறிப்பு
1. சாதியின் தோற்றம் குறித்துப் பக்தவச்சல பாரதியின் மானிடவியல்
கோட்பாடுகள்
2.
மேலது
3.
இந்தியா டூடே
வார இதழ்
4.
மறுபக்கம்
5.
மேலது
,பழையாற்று வெள்ளம் போல... ப.17
6.
மேலது,
முன்னுரை ப.32
7.
மறுபக்கம்
8.
மேலது ப.64
9.
மேலது ப.65
10. மேலது ப.162
11. மேலது ப.162
12. மேலது பக்.167-168
13. மேலது ப.173
14. மேலது ப.17
15. மேலது ப.722
16. மேலது ப.197
17. மேலது
18. மேலது ப.188
19. மேலது ப.189
20. மேலது
21. மேலது ப.
22. மேலது ப.205
23. மேலது ப.
24. மேலது ப.208
25. மேலது ப.210
26. மேலது ப.212
27. மேலது ப.213
28. மேலது ப.473
29. மேலது ப.476
30. மேலது ப.
31. மேலது ப.
32. மேலது ப.234
முதன்மை நூல்
பொன்னீலன் மறுப்க்கம்
நியூ
செப்ஜ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
சென்னை
– 600 098
முதல் பத்ப்பு : ஏப்பிரல் 2010
இரண்டால்
பதிப்பு :டிசம்பர் 2010
துணை நூற்பட்டியல்கள்
இந்திரா பார்த்தசாரதி “குருதிப்புனல்”
கிழக்கு பதிப்பகம்
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
வெளியான ஆண்டு : 1975
கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட ஆண்டு : 2005
சமுத்திரம்.சு
“ஊருக்குள்
ஒரு புரட்சி”
மணிவாசகர்
பதிப்பகம்
8/7
சிங்கர் தெரு, பரிமுனை
சென்னை-8
தமிழ்ச்செல்வன், ஜோ ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’
ஆதாம் ஏவாள் பதிப்பகம்
2012
துரை.சு., ’தமிழ்
இலக்கிய ஆய்வில் மார்க்சிய நோக்கு’
காவ்யா
வெளியீடு,
பெங்களுர்,
முதல்
பதிப்பு – 2000
பிரேமா ,இரா., ”பொண்ணீயம்”
தமிழ்ப்புத்தகாலயம்
சென்னை,
முதல் பதிப்பு -2000
ராமச்சந்திரன், எஸ் -
கணேசன், அ. ”தோள்சீலைக் கலகம்:தெரிந்த பொய்கள்
தெரியாத உண்மைகள்”
தென்னிந்திய சமூக வரலாற்று
ஆய்வு நிறுவனம்
தாகம், 200
ஜெயகாந்தன் “மூங்கில் காட்டு நிலா”
மீனாட்சி புத்தக நிலையம், 1981
ஆய்வுக்கு உதவிய இணையதள முகவரிகள்
1.
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=61008073&format=html&edition_id=20100807 By சுப்ரபாரதி மணியன
3.
http://www.natpu.in/?p=859 எழுத்தாளர்
பொன்னீலனின் மறுபக்கம் நாவல் வெளியீட்டு விழா 29.05.10
அன்று சென்னை
தேவநேயப் பாவாணர் நூலக சொற்பொழிவுக் கூடத்தில் நடைபெற்றது.
4.
”இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறுகளின் மறுபக்கம் ” மோகனா முனைவர்பட்ட ஆய்வாளர் தமிழிலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம் http://mohanawritings.blogspot.in/2011/06/blog-post_9661.html
5.
”மண்டைக்காடு கலவரத்தின் மறுபக்கம்” – சுப்புராயுலு http://maatruonline.com/2011/05/29/
மண்டைக்காடு- கலவரம்/
10. “வர்க்க முரண்”
- முனைவர் செ.வீர அழகிரி